Tuesday 4 May 2021

 ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 50


இடைந்தோர் இருப்பிடம் இல்லாது வஞ்சகன் ஏங்கியுள்ளம்
உடைந்தோட நோக்கி எமைக் காத்து அருள் உறு வீடணற்கும்
அடைந்தோம் எனவே அரசு அளித்தாய் அறுகால் அரும்பைக் குடைந்தோகை கூறும் மலர்ப் பொழிற் பேரெயில் கோவிந்தனே.

உன்னைச் சரணமென்று அடைந்த விபீடணற்கு அபயம் தந்து அரசளித்தாய்.அதுபோல் எம்மைச் சிறையிலிட்ட வஞ்சகனான  அதிகாரி ஓரிடமின்றி தோற்று ஓட எமைக் காத்து அருள்வாய் என்று வண்டுகள் தேனுண்ணும் சோலைகள் நிறைந்த திருப்பேரைத் தலத்தில் விளங்கும் கோவிந்தா உனைச் சரண் அடைந்தோம்.

Tuesday 20 April 2021

  ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 49

பால் கொண்ட நீர் அன்னம் வேறாக்கும் யாம் செய் பழம் பவத்தால் 
மேற்கொண்ட வெஞ்சிறை வேறாக்க நீயன்றி வேறில்லையால்
சூல் கொண்ட செந்நெல் வயல் பேரை நூற்று எண்மர் சூழ்ந்து தொழும்
கார்க்கொண்டலே இடைமாதர் மகிழும் கதிர் மணியே

அன்னமானது பாலில் கலந்த நீரைப் பிரித்துண்ணும் திறனுடையது. ஆனால் நாங்கள் செய்த பழவினையால் சிறையில் வாடும் துன்பத்தை தீர்க்க கதிர்முற்றி நின்று செந்நெல் வளமுடைய திருப்பேரை நூற்று எட்டு சாமவேதியர் நித்தம் தொழும், கோபியர் மகிழும் மேக வண்ணா உன்னையன்றி  யாரால் இயலும்.

Thursday 15 April 2021

 ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 48

முன்னம் பழகி அறியோம் பின்னேனும் முகம் விழியோம்
இன்னம் பழம்பவம் ஏறாமல் காத்தருள் ஏற்றைச் செங்கால் 
அன்னம் பழன வயல்தோறும் துஞ்சும் அடர்ந்த பசும்
தென்னம் பழம் சொரியும் திருப்பேரெயில் ஸ்ரீதரனே

சிறைப் படுத்திய அதிகாரியின் பெயரைக் கூட நாங்கள் முன்பு கேட்டதில்லை. பின்பும் இது வரை அவன் முகத்தில் விழித்ததுமில்லை.    முன்செய்த தீவினைப் பயன் வந்து, புகுந்து மிகாமல் ரக்ஷிப்பாயாக.
மரங்கள் தாமாகவே பழங்களை உதவுகின்ற தென்திருப்பேரையிலுள்ள வாஸுதேவ தருவாகிய நீயே வந்து உதவ வேண்டாமொ என்று புருஷாகார பூதையான பிராட்டியின் சேர்த்தியும் நினைந்து மன்றாடி வேண்டுகிறார்.

Friday 12 March 2021

  ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 47

விடல் நடவாது கருமம் செய் தானை விலக்குவை எம் 
உடனடை மா துயர் தீர்த்து எமை ஆண்டருள் உள்மகிழ்ந்து
திடநட மாதர் இடையே பதாம்புயம் சேப்ப நின்று
குடநட மாடும் முகுந்தா மகரக் குழை கொண்டலே

தீர்வையை செலுத்த அவகாசம் கொடுக்காமல் எம்மை சிறையிலடைத்தவனிடமிருந்து எம்மை அடைந்த துயர் தீர்ப்பாய் கோபியர் இடையே உன்னுடைய செந்தாமரை போன்ற பாதங்கள் சிவக்க நின்று குடக்கூத்தினை ஆடிய முகுந்தா மகரக் குழையை அணிந்த கொண்டல்வண்ணனே








Tuesday 8 December 2020

   ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 46

வாமனன் நூற்றெண்மர் போற்றும் பிரான்மலராள் கணவன்
பூமனை நாபியிற் பூத்தோன் அடங்கப் புவியை உண்டோன்
காமனைத் தந்த தமிழ்ப்பேரை வாழும் கருணைமுகில்
நாமனைச் சிந்தையில் வைப்பினும் வீழார் நரகத்திலே.

நூற்று எட்டுப் பேர் வணங்கும் வாமனனை திருமகளின் நாயகனை நாபிக் கமலத்தில் பிரமனைப் படைத்து அவன் படைத்தப் புவியை அவனோடு பூமியை உண்டவனை, காமனைப் படைத்தவனை தென்திருப்பேரை  உறையும் கருணைமுகிலை சிந்தையில் வைப்போர் நரகத்தில் வீழார்.

                                                                                       ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 45

அடியார் இடத்தில் இடர்கள் வந்தாலும் அவையகற்றி
நொடியாகப் போக்கலும் நீயல்லையோ ? மின்நுடங்குவஞ்சிக்
கொடியாள் இடைச்சி ஏர் தாம்பால் அடிப்பக்குழைந்து நின்ற
வடிவா கருணை முகிலே தென் பேரை எம் வாமனனே.

 அடியார்களுக்கு எத்தனை இடர் வந்தாலும் அதனை ஒரு நொடியில் போக்க வல்லவன் நீயன்றோ ? மின்னலைப் போல இடையுடைய யசோதை நீ வெண்ணை உண்டாயென்று பழந்தாம்புக் கயிறால் அடிக்க பொய்யச்சம் காட்டி நின்றாயே கருணை முகிலே தென்பேரையில்  உறையும் பெருமானே வாமனனே.




Monday 24 August 2020

  ஸ்ரீ:

மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி

பாடல் 44

பித்தனைப் போல் தினம் ஏங்காமல் இந்தப்பிணிப்பு அகல
எத்தனை நாட்செல்லுமோ ? அருள்வாய் இசை சேர் குருகூர்
முத்தனைப் பாவின் மகிழ்ந்து புள் ஊரும் முகுந்த மலர்க்
கொத்தலர் பேரை அதிபா மகரக் குழைக்கொண்டலே

பைத்தியக்காரனைப் போல சிறையிலிருந்து  இன்னும் எத்தனை நாள் ஏங்குவதோ ? குருகூர் சடகோபன் திருவாய்மலர்ந்தருளிய சாமவேத ஸாரமான பண் அமைந்த பாசுரங்களை உகந்து கருடவாஹனத்தில்  ஸேவை ஸாதிக்கின்ற முகுந்த, மலர்க்கொத்துகள் மலரும் திருப்பேரை உறையும் மகரக் குழை அணிந்த மேகவண்ணனே, சிறைத்துன்பம் தீர அருள்வாயே.